ஈரோடு:தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் போதை புழக்கம் அதிகரித்து வருவதை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன், “தமிழகத்தில் போதைப் பொருள் சர்வசாதாரணமாகத் திமுகவினரின் வீடுகளில் விற்கப்படுகிறது. முதல்வராக மு.க ஸ்டாலினால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் இந்தியாவில் தமிழகம் தலைகுனியும் அளவிற்கு திமுக செய்துள்ளது.
தமிழகம் தரம் கெட்டுப் போயுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், போதை ஊசி விற்கப்படுகின்றன என புகார் கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்காக நாம் இரண்டு மாதக் காலம் உணவில்லாமல் உறக்கமில்லாமல் உழைக்க வேண்டும்” என்றார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “அதிமுகவின் ஆற்றல்மிக்க சக்தியாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உள்ளனர். கர்நாடக நக்சலைட், ஆந்திராவில் மாவோஸ்டுகள் இருக்கத் தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒழித்தார் ஜெயலலிதா. கஞ்சா, போதைப் பொருள் விற்கப்படுகிறது இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். கஞ்சா ஒழிப்பதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவை ஒழிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:"பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் ஓட்டு விழாது" - திமுக எம்.பி கனிமொழி விளாசல்!