தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான்பட்டி பாலோடை பகுதியைச் சார்ந்தவர் குமரேசன், வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி (54) என்ற மனைவியும், கிஷோர் குமார் (29) என்ற மகனும் உள்ளனர். கிஷோர் குமார், தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக, அவர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
அவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தேனி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. கிஷோரின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவரது தந்தை வீட்டிலேயே இருந்து வந்து நிலையில், மனைவியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் தொடர்ந்து கிஷோரையும், அவரது குடும்பத்தையும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த பிப்.25ஆம் தேதி, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்று விட்டு தந்தை குமரேசன் அங்கேயே தங்கி விட, நேற்று (பிப்.27) காலை மாரீஸ்வரி மற்றும் கிஷோர் குமார் ஆகிய இருவரும் தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். இதனிடையே வீட்டிலிருந்து வெளியே வந்த கிஷோரை அவரது உறவினர்கள் பார்த்தபோது, உடல்நிலை சரியில்லாதது போல் காணப்பட்டுள்ளார்.