கோயம்புத்தூர்:2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குகளை சேகரிக்க தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடி 4 முறை தமிழகத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை பாஜகவுக்கு வாக்கு வங்கி உள்ள மாவட்டங்களில் முதன்மையானது. எனவே, சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சமயங்களில், மோடியின் பிரச்சாரக் கூட்டமானது கோவையில் நிச்சயம் இடம் பெறும். அந்த வகையில், நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காகப் பிரதமர் மோடி வருகின்ற 18ஆம் தேதி கோவை வரவுள்ளார்.
இதனை ஒட்டி, கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுடன், இன்று முதல் பல்வேறு பகுதிகள் தற்காலிக Red Zone பகுதிகளாகக் கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. வரும் 18ஆம் தேதி திங்கட்கிழமை, கோவை மாநகர் மேட்டுப்பாளையம் சாலை ஹவுஸிங் யூனிட் அருகில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடியின் Road Show நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று மார்ச் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள், தற்காலிக Red Zone பகுதிகளாகக் கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம்!