தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விக்கிரவாண்டியில் பாமக வெற்றியே தமிழக மக்களின் வெற்றி" - லிஸ்ட் போட்ட ராமதாஸ்! - Vikravandi By Election - VIKRAVANDI BY ELECTION

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்று கேட்டால், ஒரு காரணத்தைக் கூட அக்கட்சியினரால் கூற முடியாது. ஆனால், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 2:52 PM IST

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும், சமூகநீதியையும் நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இடைத்தேர்தல்கள் ஒரு மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியை எடை போடும் தேர்தலாக அமையும் என்பது தான் நம்பிக்கை. ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் எடைத் தேர்தல்களாக இல்லாமல், எடைக்கு எடை பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கும் தேர்தலாக மாறிவிட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த கலாச்சாரம் உச்சத்தை அடைந்திருக்கிறது. மக்களை மக்களாக மதிக்காமல், துண்டு சீட்டுகளைக் கொடுத்து, அடைத்து வைத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யும் போது, பரிசுப் பொருட்களை வழங்கும் ‘மேளா’க்கள் தினமும் அரங்கேறுகின்றன.

சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கோருவது தான் ஆளுங்கட்சிக்கு அழகு. ஆனால், இது தான் எங்களின் சாதனை என்று கூறுவதற்கு எதுவுமில்லை என்பதால் தான் மக்களுக்கு பணத்தையும், பரிசுப்பொருட்களையும் வாரி இறைக்கிறது திமுக. இதுவே அக்கட்சியின் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலம் தான். அதிலும் குறிப்பாக, பல கிராமங்களில் திமுகவினர் வீடு வீடாக சென்று கொடுத்த பரிசுப் பொருட்களை பொதுமக்களே கொண்டு வந்து திமுக அலுவலகங்களில் வீசி விட்டு செல்வது தமிழ்நாட்டில் எந்த இடைத்தேர்தலிலும் நடைபெறாத அதிசயம் ஆகும்.

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண். அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என்பதை அத்தொகுதி மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். இத்தேர்தலில் மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு திமுக அலுவலகங்களில் திருப்பி வீசப்படும் பொருள்கள் தான் சான்று. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்று கேட்டால், ஒரு காரணத்தைக் கூட அக்கட்சியினரால் கூற முடியாது. ஆனால், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும்.

  1. தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கத் தவறியது. பட்டியலினத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டிக் கொல்லப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை நிலவுவது.
  2. சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது.
  3. நியாய விலைக்கடைகளில் மக்களின் அடிப்படைத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியது.
  4. தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது.
  5. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சமூகநீதி விவகாரத்தில் திமுக செய்த தில்லுமுல்லுகள் அம்பலமாகிவிடும் என்பதற்காக 69% இட ஒதுக்கீட்டையே காவு கொடுக்கத் துணிந்திருப்பது.
  6. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது.
  7. 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி இதுவரை வழங்காமல் ஏமாற்றுவது.
  8. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மறுப்பது.
  9. விக்கிரவாண்டி தொகுதியில் 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாதது.
  10. விக்கிரவாண்டியில் அரசு கல்லூரி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது.
  11. நந்தன் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தாதது.
  12. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 5.50 லட்சம் அரசு வேலைகளை வழங்காதது.
  13. தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வராமல் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்ப்பது.
  14. அரசு பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது.
  15. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது.

திமுக அரசின் வேதனைப் பட்டியல் இன்னும் நீண்டது. அவற்றை பட்டியலிட பக்கங்கள் போதாது. இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்ததும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.38% உயர்த்த முடிவு செய்திருக்கிறது. பணபலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியால் திமுக அதிகாரத் திமிரின் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதனால், மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப் படாத திமுக அரசு, அடுக்கடுக்கான மக்கள் விரோத திட்டங்களை திணிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்துவது தான் அது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் அதன் அகங்காரத்தையும், மக்கள்விரோத மனநிலையையும், சமூக அநீதி மனப்பான்மையையும் தகர்க்கும். அது கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த அனைத்து தவறுகளையும் திருத்துவதற்கு வழிவகுக்கும்.

கடந்த மூன்றாண்டுகளாக மறுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மின்சாரக் கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சமூகநீதி நடவடிக்கைகளும் தானாக நடக்கும். அதனால் தான் சொல்கிறேன்... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி, சமூகநீதியின் வெற்றி" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இறுதிக்கட்ட பரப்புரையில் உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details