விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூா் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (ஏப்.9) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம் தனி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “மக்களின் வாழ்வாதாரம் நிலையாக கிடைக்கப் பெற வேண்டும் மற்றும் சமமான கல்வி, மருத்துவ வசதி ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் பாமக தொடா்ந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. பாமக நடத்திய தொடா் போராட்டங்களால் தான் 108 சாதிகளைச் சோ்ந்தவா்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. நான் பதவிகளை அனுபவிக்காதவன்.
மக்கள் நலன் ஒன்றே எனக்கு முக்கியம். எனக்கு விருதுகள் தேவையில்லை. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் போன்ற பதவிகள் நான் பெறமாட்டேன் என்று முன்னரே சத்தியம் செய்துள்ளேன். மக்களுக்கான வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியும், மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும். விவசாயிகள், பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.