தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி பாமக மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை முதல் தருமபுரி நகர்பகுதி உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள், வணிகர் உள்ளிட்டோர் கடையடைப்பு செய்திருந்தனர்.
இது குறித்து பாமக கவுரவ தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி, தருமபுரி ஏம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இருந்தனர். அப்போது அங்கு வந்த தருமபுரி ஏடிஎஸ்பி ஸ்ரீதரன், டிஎஸ்பி சிவராமன் ஆகியோர் இங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கூடாது எனவும், மீறினால் பிக்கப் செய்யப்படுவீர்கள் என மிரட்டினர்.
பின்னர் வன்னியர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பாக அரை நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கு தருமபுரி மாவட்ட வியாபாரிகள், அனைத்து வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதனால், இந்த போராட்டம் நுாறு சதவீதம் வெற்றியடைந்தது. இரு காவல் அதிகாரிகள் எங்களை மிரட்டியதுடன், பேட்டி எடுக்க காத்திருந்த செய்தியாளர்களின் மைக்கை தள்ளி விட்டு மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டம் மழையளவு குறைந்த மாவட்டம் ஆகும். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைப் பாதுகாக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இதையும் படிங்க :சனாதன விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்!மேலும், இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் கையெழுத்து இட்டுள்ளனர். இது தமிழக அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நானும், வெங்கடேஸ்வரனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.