சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி பேசியதாவது; ''கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 41 பேர் இறந்துள்ளனர். 110 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கண்பார்வை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து பாமக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். நகராட்சி மையப் பகுதியில் காவல் நிலையத்தை ஒட்டி கள்ளச்சாராயம் விற்கிறார்கள். ஆனால், காவல் நிலையத்தில் வழக்கு என்னவென்றால் ''சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்கிறார்கள்'' என உள்ளது.
இது எவ்வளவு பெரிய கொடுமையான செயல்? கள்ளச்சாராயம் குடித்தால் உடனே சாவு.. டாஸ்மாக் சாராயம் குடித்தால் மெல்ல மெல்ல சாவு.. இதற்கு முன்பு செங்கல்பட்டு, மரக்காணத்தில் நடந்தது தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. அடுத்து எங்கு நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஓரு சொட்டு மது இல்லா பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக சார்பில் கூறியுள்ளோம்.
கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென பாமக சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. இது மதச்சார்பற்ற அரசு. ஆனால் எதற்கு டாஸ்மாக்கை நடத்த வேண்டும்? கள்ளச்சாராயம் என்ற பெயரில் கள்ளச்சாராயத்தில் கலப்படம் செய்து இங்கு பாக்கெட்டில் விற்பனை செய்வது வன்மையாக கண்டிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கஞ்சா பல்வேறு வடிவத்தில் வந்துள்ளது. இதனால் மாணவர்கள் வீணாகிறார்கள். மக்கள் நலனை காப்பதற்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்பது பாமகவின் கொள்கை. மீண்டும் மீண்டும் தமிழக மக்கள் நலன் கருதி மக்களின் வாழ்வை காப்பதற்கு, இளைஞர்களை அழிவுபாதையில் இருந்து மீட்பதற்கு டாஸ்மாக்கை மூட வேண்டும், போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி 44 வருடமாக போராடி வருகிறது''என்றார் ஜி.கே.மணி.
என்னிடம் கருப்பு சட்டை இல்லை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்," கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இறந்த உயிர்களைக் குறித்து கவலைப்படாமல் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர், வருத்தப்படவோ இல்லை" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். நீங்கள் கருப்பு சட்டை அணியவில்லையா? என்ற கேள்விக்கு, "என்னிடம் கருப்பு சட்டை இல்லை; அதனால்தான் போடவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிரொலி: கடலூரில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல்!