கோயம்புத்தூர்:கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் My V3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும் மிரட்டும் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் சக்தி ஆனந்த் மட்டுமல்லாது அந்த நிறுவனத்தின் பின்புலமாகச் செயல்படும் குருஜி என்கிற விஜயராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டியும் அந்த நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த புகார் குறித்து, கோவை பாமக மாவட்டச் செயலாளர் கோவை ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 5 மாதங்களாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வரும் My V3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி சட்டமன்றத்தில் கவணஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.