சென்னை: பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் கூட்டணி ஒப்பந்தம் கைழுத்தானது.
பாமகவிற்கு வெற்றி வாய்ப்பை தரக்கூடிய தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களை பாஜக குறிவைத்துள்ளது. முன்னதாக, பாமக சார்பில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் அதிமுகவிடம் கேட்கப்பட்டது. இதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து கூட்டணி குறித்து நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இவ்விரு கட்சிகளுக்குமிடையே இழுபறி நீடித்து வந்தது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரிடையே நடைபெற்று வந்ததாக கூறப்படும் மறைமுகமாக பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மத்திய அமைச்சர்கள் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் டெல்லிக்கு திரும்பினர். அப்போது, தமிழ்நாட்டில் தாமரை மலரவைக்கும் மாற்று சக்தியாகவும், அதிமுகவிற்கு பாடம் புகட்டுவதற்காகவும், திமுகவை தோற்கடிக்கவும் பாமகவுடன் கைக்கோர்க்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை டெல்லி மேலிடத்திற்கு எடுத்துரைத்தார். இதனையடுத்து, விமானத்தில் சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர்கள் இருவரையும் மீண்டும் அதே நாளில் சென்னைக்கு வரவழைத்தார்.
இதைத்தொடர்ந்து பாமக - பாஜக கூட்டணி உறுதியானது. பாஜக கூட்டணியில் பாமகவை இடம்பெற செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்திற்கு அளித்த அழுத்தம் காரணமாகவே மீண்டும் பாஜக - பாமக கூட்டணி அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, 2019 அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அங்கம் வகித்தன. இப்போது, பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் நேற்று திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 'கட்சியின் எதிர்கால நலனையும், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதே சாலச்சிறந்தது' அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார். இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.