சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே இக்கூட்டத் தொடரில், அரசு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தொடர் முடிவுற்றுள்ள நிலையல், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பொதுவாக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். ஆனால், ஒரு வாரமே நடந்துள்ள இந்த கூட்டத்தொடரில் சட்டப்பேரவை குறைந்தபட்சம் 100 நாட்களாவது நடக்க வேண்டும். ஆனால், ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு: இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகப்பெரிய அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஆதங்கமும் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர்களுக்காக அறிவிக்கப்பட்ட 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை தொடரப்பட்டது. இத்தனை ஆண்டுகாலம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை, இந்த சட்டப்பேரவை தகர்த்துள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிடுக:சாதிவாரி கணக்கெடுப்பு என்ற தவறான முன்னெடுப்பைச் சொல்லி உள்ளது, இது அதிர்ச்சியான செய்தி. ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் ஏமாற்றத்தை தரும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் என்பது எல்லா சாதிகளுக்கும் உரிய வகையில் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதா என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு முடியாது என்று சொல்லிவிட்டார்கள். வன்னியர்களுக்கும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்காத கூட்டத்தொடராக உள்ளது. குறுகிய நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடராகவும் உள்ளது.
பூரண மதுவிலக்கு ஏன் கொண்டு வரவில்லை?கள்ளகுறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய சாவு 65 ஆக உள்ளது. சாராய சாவுகள் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் கற்பித்துள்ளது. இதற்கான தீர்மானத்தில் விலைமதிப்பற்ற மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் கள்ளச்சாராயம் என்று சொல்கிறோம். டாஸ்மாக் சாராய பாட்டிலில் 'மது நாட்டுக்கு கேடு வீட்டுக்கு கேடு உயிருக்கு கேடு' என்று உள்ளது.
டாஸ்மாக் கடையை ஒழிக்க வேண்டும். மதுவிலக்கு பூரண மதுவிலக்காக வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அதுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது. எங்கு பார்த்தாலும் சாராயம் விற்பனை நடக்கிறது. முழு மதுவிலக்கு ஏற்படும் என்ற பாமகவின் நம்பிக்கை ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது' என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024