தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விக்கிரவாண்டிக்கு வெளிமாநில தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! - Vikravandi by election - VIKRAVANDI BY ELECTION

Anbumani Ramadoss on Vikravandi election officer: விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் அதிகாரியை பணியில் இருந்து விடுவித்து, வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 4:11 PM IST

சென்னை:விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிகள் மீறப்படுவதாகவும், பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், மேலும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பாமக மற்றும் அதிமுகவினர் மீது திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திமுகவின் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் அதிகாரியும் அவர்களுக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவின் 9 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற அமைச்சர்களும், 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான கார்களில் தொகுதியை வலம் வருகின்றனர். இது அப்பட்டமான விதிமீறல் என்பதால், அந்த கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அதை செய்யாமல் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டக் காவல்துறையும், அதிகாரிகளும் பாதுகாப்பு அளித்துக் கொண்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் கோயில் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து திமுகவினர் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அங்கு திமுகவினர் பெருமளவில் கூடி மது அருந்தி, சீட்டு விளையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சட்டவிரோதமான இத்தகைய கட்டமைப்புகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய கூடாரம் அமைப்பதற்காக ஆசூர் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்த அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கந்தன் என்பவரை கண்ணதாசன் கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட பாமகவின் கிளைத் தலைவர் அண்ணாதுரையும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதியில் காலமான 15 ஆயிரம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களின் ஒட்டுகளை கள்ளவாக்குகளாக போட திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று பாமக சார்பில் பலமுறை புகார் அளித்தும், அதன் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை.

இவை அனைத்துக்கும் உச்சமாக தேர்தல் அதிகாரி சந்திரசேகர் கடந்த சில நாட்களாக தேர்தல் அலுவலகத்துக்கு வருவதே இல்லை. கோட்டாட்சியர் நிலையிலான அவரால் திமுக அமைச்சர்களின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் மீறி நேர்மையான முறையில் பணியாற்ற முடியாது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்தே திமுகவின் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகரால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டது. தேர்தல் பார்வையாளர் விக்கிரவாண்டியில் இல்லாமல் விழுப்புரத்தில் தங்கியுள்ளார். அவரும் திமுக மீதான புகார்களை கண்டுகொள்வது கிடையாது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓரளவாவது நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வராத வெளிமாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். எனவே, தேர்தல் அதிகாரி சந்திரசேகரை அந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அவருக்கு பதிலாக வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக ஒன்றியத்திற்கு இரு பார்வையாளர்கள், விக்கிரவாண்டி பேரூருக்கு ஒரு பார்வையாளர் என மொத்தம் 5 பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும், இதுவரை பாமக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"அரசு மதுவில் கிக் இல்லை..விட்டில் பூச்சியைப் போல கிக்குக்காக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கிறார்கள்!" - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details