விழுப்புரம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், பாமக சார்பில் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதனிடையே, வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து முடிவுகளைத் தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.