சென்னை:பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் கூட, அக்.28ஆம் தேதி திங்கள்கிழமை இரவு வரை அவர்களுக்கு அது வழங்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே போனஸ் வழங்கப்பட்டு விட்டதாகவும், உண்மைக்கு மாறான செய்திகளை ராமதாஸ் கூறுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில் அவர் கூறியிருப்பது தான் அப்பட்டமான பொய்.
பாமக கே.பாலு வெளியிட்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu) போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான போனஸ் அக்டோபர் 10ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும், 28ஆம் தேதி இரவு வரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் 28-ஆம் தேதி இரவில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனப்பதிவு 29ஆம் தேதி காலை வெளியான நிலையில், 29ஆம் தேதி காலை 11 மணிக்குப் பிறகு தான் போனஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இதையும் படிங்க: "பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள மனமில்லாமல் பொய் அறிக்கை" - அமைச்சர் சிவசங்கர் கண்டனம்!
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான போனஸ் தொடர்பாக சிவசங்கர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கூட, போனஸ் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் ஆணை கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது என்று தான் கூறியிருக்கிறாரே தவிர, போனஸ் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்பட்டது என்பதைக் கூறவில்லை.
தமிழ்நாட்டில் இன்று மோசமான நிர்வாகம் நடைபெறும் துறை என்றால் அது போக்குவரத்துத்துறை தான். 28ஆம் தேதி இரவு வரை போனஸ் வழங்கப்படாத நிலையில், அந்த உண்மையை ஒப்புக்கொள்ள துணிச்சல் தேவை. அந்த துணிச்சல் அமைச்சர் சிவசங்கருக்கு இல்லை. அதனால் தான் போனஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் கூறி பிழைப்பு நடத்துகிறார். இப்படியெல்லாம் அரசியல் நடத்தத் தேவையில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் விஷயத்தில் பாமக தலைவர் கூறியது தான் உண்மை; அமைச்சர் சிவசங்கர் கூறியது பொய் என்பதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் சிவசங்கருக்கு மனசாட்சி இருந்தால் தாம் கூறிய பொய்க்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். செய்வாரா?" எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்