சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு 2024ல் நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இனி குரூப் 2 பதவிகளுக்கு நடைமுறையில் இருந்து வந்த நேர்முகத் தேர்வு இனி கிடையாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2 பதவிகளில் எந்தத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வுச் செய்யப்படுவார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.