சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ், ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243, இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பறித்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத தமிழக அரசு, இப்போது அரசாணை 243 என்ற பெயரில், அவர்களின் மீது பேரிடியை இறக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையின்படி, தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.
அரசாணை 243-ன் மூலம் ஒன்றிய அளவிலான முன்னுரிமை பறிக்கப்பட்டு, மாநில முன்னுரிமை திணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சொந்த ஒன்றியத்தில் பணியாற்றியவர்கள் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்திற்கும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை 60% பெண்கள்தான் பணியாற்றுகின்றனர்.
கணவர் பணி செய்யும் இடம், குழந்தைகளின் கல்வி, குடும்பச் சூழல், சொந்த ஊரில் பணி செய்வதில் உள்ள வசதி உள்ளிட்ட காரணங்களால், பெண்கள் சொந்த ஒன்றியத்தில் பணி செய்வதையே விரும்புவர். அதனால், அவர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். அதனால், இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்த ஒருவர், ஓய்வு பெறும்போது அதே நிலையிலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இது சமூக அநீதி.
243ஆம் அரசாணையின்படி, 20 ஆண்டுகளாக இருந்த பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 243ஆம் அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த அல்லது பதவி உயர்வு பெற்ற நாள்தான் தகுதி காணும் நாளாக கணக்கில் கொள்ளப்படும்.