சென்னை:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட தமிழக மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில், மழை விட்டதும் பின் அவை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை மாநகரின் முதன்மைச் சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது.