விழுப்புரம்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதில், விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாமக மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரை பாமக அறிவித்துள்ளது.
விளையாட்டு டூ அரசியல்:தனது பத்தாவது வயதிலிருந்து Liverpool Football Club-இன் தீவிர ரசிகரான முரளி சங்கர், 17 வயதில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2007-ல் பெங்களூருவில் Bangalore Kickers FC என்ற கிளப்பில் சேர்ந்து, அந்த அணிக்காக ஒரே சீசனில் 14 கோல்களை அடித்துள்ளார்.
டெல்லியில் படிப்பு:அதன் பிறகு, தலைநகர் டெல்லிக்குச் சென்று எம்பிஏ படித்த இவர், Delhi Kop FC-க்காக விளையாடியுள்ளார். பின்னர், பிரெஞ்சு கால்பந்து கிளப்பில் முக்கிய பதவியில் அமர்ந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.