சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டின் தேர்தல் விறுவிறுப்பை பெற்ற நிலையில் அதிமுக - திமுக என்ற கூட்டணிகளின் நடுவே நாம் தமிழர் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் என தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு பாஜக தலைமையிலான புதிய அணியும் தமிழ்நாட்டில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவைகள் அங்கம் வகிக்கின்றன. மிக முக்கியமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்.
தாமரை பக்கம் சாய்ந்த மாம்பழம்:நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட உள்ளதை உறுதி செய்துள்ளது. 2019-ல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளது.