ராணிப்பேட்டை: இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், "இந்த பாஜக - பாமக கூட்டணி முடிவு அவசியமானது மற்றும் காலத்தின் கட்டாயம். தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, பொதுநல வழக்கு தொடுத்து மூடியவர், வேட்பாளர் கே.பாலு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, டெல்லி சென்று வழக்காடி இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடினார்.
மதுக்கடைகளுக்கு மதுவை விற்பனை செய்பவர் தான், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன். அவர் மிகப்பெரிய பீர் தொழிற்சாலையை வைத்துள்ளார். கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தடையாக பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றோம்.