தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“எனது உயிருக்கும் அச்சுறுத்தல்..” ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரைச் சந்தித்தபின் அன்புமணி ராமதாஸ் பேட்டி! - ANBUMANI RAMADOSS about DMK - ANBUMANI RAMADOSS ABOUT DMK

Anbumani Ramadoss Meet Armstrong Family: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 7:41 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “ஆம்ஸ்ட்ராங் இழப்பில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. அவரது மறைவு தமிழகத்தில் உள்ள சமூகநீதி இயக்கத்துக்கு பின்னடைவாக பார்க்கிறேன். அடக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும், இவர்களுக்கு சமூகநீதி வர வேண்டும் என்றால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று 20 ஆண்டுகளாகக் கூறி வருகிறார்.

இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக காவல்துறையினர் மீது மரியாதை இருந்தது. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்துவிட்டேன். சென்னை ஆணையர் அருண் உணர்வுப்பூர்வமாக வேலை செய்ய வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள போதைப்பொருள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. பொது வாழ்க்கையில் இருப்பதால் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னையில் சிபிஐ விசாரணை நிச்சயம் வேண்டும். ஏனென்றால் மூன்று மாநிலம் அதில் சம்பந்தப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான தரவரிசை பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநில இறகுப் பந்து கழக தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரி ஒரு பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தக்கூட தகுதி இல்லாதவர். விக்கிரவாண்டியில் பணத்தையும், பொருளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். இந்த இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக கேலிக்கூத்து.

தமிழக சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கு போதைப்பொருட்கள் தான் காரணம். கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து பாமக ஆய்வு நடத்தி வருகிறது. அதில் சில நன்மைகளும் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருமாவளவன் கூறிய கருத்துகளை நானும் வரவேற்கின்றேன். சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு நான் சிபிஐ விசாரணை கோரினேன். அதனை ஏற்க திருமாவளவன் தயாரா?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்.. மனைவி பொற்கொடிக்கு அளித்த வாக்குறுதி! - mk stalin meet armstrong family

ABOUT THE AUTHOR

...view details