விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து, விக்கிரவாண்டி பெரியார் திடலில் நேற்று இரவு தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்த இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக தேசிய மேலிட நிர்வாகி சுதாகர் ரெட்டி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை, ஆட்சியை இழக்கப் போவதும் இல்லை. ஆனால், இந்த விக்கிரவாண்டி தேர்தலில் நாம் வெற்றி பெறுவது 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னோட்டமாக அமையும்.
விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் பாமகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் வரும். இத்தேர்தலில் திமுக பணபலம் மற்றும் அதிகார பலத்துடன் சந்திக்கிறது. ஆனால், நாங்கள் கூட்டணி பலம் மற்றும் மக்கள் பலத்துடன் சந்திக்கிறோம்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினால், எங்களுக்கு அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்கிறது திமுக அரசு. தரவுகள் இல்லை என ஒரு அமைச்சர் கூறுகிறார். தரவுகள் இருக்கிறது, ஆனால் இட ஒதுக்கீடு தர முடியாது என மற்றொரு அமைச்சர் பேசுகிறார். இப்படியெல்லாம், சட்டமன்றத்தை ஒரு கேளிக்கூடாரமாக மாற்றுகின்றனர் திமுக அரசு.
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரப்போகிறது. தப்பித்தவறி இந்த இட ஒதுக்கீடு ரத்தானால், அன்று உங்கள் ஆட்சி கலைக்கப்படும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவா் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய சமூகநீதியை வழங்கியவர் அவர். 69 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் உள்ளார்கள் என்ற தரவுகள் தமிழக அரசிடம் இல்லை. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தமிழக அரசிடம் பதில் இருக்காது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம். ஆனால், சமூக நீதியை பற்றிப் பேச முதலமைச்சருக்கு தகுதி இல்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நியாயமான தோ்தல் நடைபெற வேண்டும். இது ஒன்றும் ஈரோடு இடைத்தேர்தல் அல்ல, இது விக்கிரவாண்டி. நாங்கள் அமைதியாக தேர்தலைச் சந்திக்க விரும்புகிறோம்.
பேசக்கூடத் தேவை இல்லை, ஒரு கண்ணை அசைத்தால் என்ன நடக்கும் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதற்காக எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். திமுக ஒரு குடும்ப கட்சி தந்தை, மகன், அடுத்து பேரன் மற்றும் அவருடைய குடும்பம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும், கட்சியை வழிநடத்த வேண்டும் என நினைக்கும் ஒரு இயக்கம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு வரக் காரணம் சங்கல்ப் இயக்கம், பாஜக! காங்கிரஸ் கிடையாது' - செலவ்ப்பெருந்தகை