திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் எகிலேரி என்ற நீரோடை உள்ளது. இந்த நீரோடைக்கு அருகே ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்திக்கு சொந்தமாக தென்னந்தோப்புடன் கூடிய நிலம் ஒன்று உள்ளது.
இந்த நிலையில், சத்தியமூர்த்தி அடிக்கடி அவருடைய நிலத்திற்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், வழக்கம்போல இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த எகிலேரி நீரோடையில் சந்தேகத்திற்குரிய வகையில் பூஜை பொருள்களான எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம், பூ, தேங்காய், உள்ளிட்டவை இருந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு ஏதோ உடலை புதைத்து வைத்தது போல் அடையாளங்களும் தென்பட்டுள்ளன. ஆனால், அப்பகுதியில் எந்த ஒரு துக்க நிகழ்ச்சியும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறவில்லை. இதனால், அச்சமடைந்த சத்தியமூர்த்தி இது குறித்து இருணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் வடிவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மதுவிலக்கு அமல்படுத்த மட்டும் தேசியம் வேண்டுமா?" - கிருஷ்ணசாமி கேள்வி!
கோட்டாட்சியருக்கு கடிதம்: சத்தியமூர்த்தி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு, இது குறித்து குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரித்துள்ளனர்.
மேலும், மண்ணில் புதைந்திருக்கும் மர்ம பொருள் என்னவென்று தோண்டி பார்ப்பதற்கு அதிகாரம் இல்லாத காரணத்தினால், மர்ம பொருள் என்ன உள்ளது என ஆய்வு கொள்ள வேண்டும் என குருசிலாப்பட்டு போலீசார் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் மர்ம பூஜை நடந்துள்ளதாகவும், மேலும் இதில் புதைந்திருக்கும் உடல் சிறிய குழந்தையா? அல்லது ஏதேனும் விலங்குகளை அடித்து புதைத்து மர்ம பூஜை செய்துள்ளனரா? எனவும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்