சென்னை:கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், ஏழு நாட்களாகியும் கொலை குற்றவாளியை பிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி அருகில் இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரம் நிகழ்ந்து 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
முடங்கிக் கிடக்கும் காவல்துறை:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினர் அவர்களின் அடிப்படையான புலனாய்வுத் திறனை இழந்து முடங்கிக் கிடக்கின்றனர்.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்களில் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளும், ஆதாரம் திரட்டும் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினம்.
தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட பதற்றமும், வேதனையும் விலகவில்லை. அதற்குள் மற்றொரு சம்பவம் சின்ன சேலத்தில் அரங்கேறியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையும், தமிழக அரசும் அதை மூடி மறைக்க முயல்கிறது. இதை பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? என்ற பயம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க:அண்ணா பல்கலை மாணவி விவகாரம்; முகநூலில் கமெண்ட் செய்த காவலர் சஸ்பெண்ட்..!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் போதைப்பொருட்கள் 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைப்பதும், காவல்துறை அதன் செயல்திறனை இழந்ததும். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல குற்றங்களில் காவல்துறையினரால் துப்புதுலக்க முடியவில்லை. இத்தகைய செய்திகளை அறிந்து கொள்வதற்கு முதலமைச்சர் விரும்புவதில்லை.
மாய உலகில் வாழும் முதலமைச்சர்:
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைக் கூட 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதலமைச்சர் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஓடுகின்றன, மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்ற பொய்யைத் தவிர்த்து, வேறு எதையும் கேட்க விரும்பாமல் மாய உலகில் முதலமைச்சர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால், அவர்களது இரண்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். எனவே, அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்," இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.