விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் (தனி) தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு முழுவதும் நமக்குச் சாதகமான ஓர் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதாவது திமுக வேண்டாம், அதிமுக வேண்டாம், தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் கடந்த 57 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சி வேண்டாம், எங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என இருக்கிறார்.
தமிழ்நாட்டுப் பெண்கள், இந்த 2 கட்சிகளால் எங்களுடைய குடும்பமே மதுப் பழக்கத்தில் அடிமையாகி விட்டார்கள். ஆகையால் 2 இரண்டு கட்சிகளும் தேவையில்லை என முடிவெடுத்து விட்டார்கள். பாமக வேட்பாளர் முரளி சங்கர் தொகுதியின் வளர்ச்சியை நோக்கி மட்டுமே செல்லக் கூடியவர். தற்போதுள்ள எம்பி ரவிக்குமார் வெற்று பெற்று இந்த தொகுதிக்காக எதாவது செய்தாரா?. அவரை யாராவது இங்குப் பார்த்திருக்கிறீர்களா?.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் எப்படி இருந்ததோ, அப்படியேதான் தற்போதும் உள்ளது. அவர் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஆனால் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் மீண்டும் போட்டியிடுகிறார் என்றால் அவர் டெபாசிட் இழப்பது உறுதி. முரளி சங்கர் குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இது காலத்தின் கட்டாயம். சமூக நீதி மண் இது, சாதிக்காகத் தியாகிகள் உயிர்த்தியாகம் செய்த மண் இது என சமூக நீதி பற்றிப் பேசுவதற்கு மருத்துவர் ராமதாஸ் தவிர வேறு யாருக்கும், இங்கே தகுதியே கிடையாது.
இட ஒதுக்கீடு தருகிறோம் என்று திமுக அதிமுக 2 கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். தருமபுரி சென்ற விளையாட்டுத் துறை அமைச்சர் பேசுகிறார், என்னுடைய தந்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்காகச் சட்ட போராட்டம் நடத்தினார் என்று. உனக்கும் சட்டத்துக்கும் என்ன சம்பந்தம், நீங்கள் ஏன் போராட வேண்டும், கையெழுத்துப் போடும் அதிகாரத்தில் நீங்கள் இருக்கும்போது, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியதுதானே. 2 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகும் நீங்கள் என்ன இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுகிறீர்கள்?.