சென்னை: ஆசிரியர்களைக் காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து யார் முடிவெடுத்தது என கேள்வியெழுப்பி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.”
“பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் அண்மையில் அத்துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.”
இதை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட நான், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஊதிய செலவை மிச்சப்படுத்தும் நோக்குடன், 497 ஆசிரியர்களை விடுதிக்காப்பாளர் பணி செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விற்கப்போகிறார்களா? என்று வினா எழுப்பி கண்டித்திருந்தேன்.”
“அடுத்த சிறிது நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்ட போது,’’ இது பற்றி எனக்குத் தெரியாது. இது பி.சி துறையில் வருகிறதா, எங்கள் துறையில் வருகிறதா? எனத் தெரியவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.”