திருப்பூர்:தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர், பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா இன்று (பிப்.27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளார். அதேபோல, சூலூர் - பல்லடம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வருகையையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்ட போலீசார் இணைந்து பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதற்காக அண்ணாமலை, இன்று காலை 9:00 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளுக்கான தனது பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
முன்னதாக, இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு மதியம் 2:05 மணியளவில் பிரதமர் மோடி வருகை தருகிறார். அதன் பின்னர், தனி ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்திற்கு 2:35 மணியளவில் வர உள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா நடக்கும் மாதப்பூருக்கு வர உள்ளார்.