மதுரை:நாடுமுழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை கோட்டத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
இதே போல் நாடு முழுவதும் உள்ள 554 ரயில் நிலையங்களைத் தரம் உயர்த்த நேற்று (பிப்.25) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை, திருமங்கலம் அருகே பொது மக்களின் வசதிக்காகக் கட்டப்படத் திட்டமிட்டு இருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல சோழவந்தான் அருகே கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது, "இந்த நிகழ்ச்சி புதிய இந்தியாவின் வேகம் எடுக்கும் வேலைத் திறனுக்கு ஒரு சின்னமாக அமைந்துள்ளது. இன்று இந்தியா என்ன செய்துள்ளதோ, அது எதிர்பாராத வேகத்தையும் அளவையும் கொண்டுள்ளது.
நமது கனவு பெரியதாக உள்ளது. அதை நனவாக்கக் கடுமையாக உழைக்கிறோம். இதை வளர்ச்சி அடைந்த இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ரயில்வே துறையின் நிகழ்ச்சி நிரூபிக்கிறது. 12 மாநிலங்களில் 300 மாவட்டங்களில் 500 ரயில் நிலையங்களில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
இது தேசத்தின் வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதற்காக இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கனேர் ரயில் நிலையம் 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரிய அச்சுக் கலையையும், தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையம் சோழர் ஆட்சிக் காலத்தையும், ஹரியானாவில் உள்ள குருக்கிராம் ரயில் நிலையம் தகவல் தொழில்நுட்ப நகரையும் பிம்பங்களாகப் பிரதிபலிக்க இருக்கின்றன.
அமிர்த ரயில் நிலையங்கள் உள்ளூர் சிறப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் ரயில் நிலைய கட்டமைப்பு உருவாக்கப்படும். இந்த ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர்க்கு நேசமான ரயில் நிலையங்களாக அமையும் என்றார். கடந்த பத்தாண்டுகளில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளவை வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், நமோ பாரத் மின்சார ரயில்கள், விரைந்து நிறைவு பெற்ற மின்மயமாக்கல் பணிகள் நடைமேடைகளில் காணும் சுத்தம், சுகாதாரம் ஆகியவையாகும் என்றார்.