கோவை:தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது. அதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதேநேரத்தில், பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை கொத்துக் கொத்தாக மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்தபோதும் அவர்களது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்திருக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்களுக்கு இப்பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மோடி, எவ்வித மத பாகுபாடுமின்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். அதுவே, காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது, நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதைத் தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.
நாட்டு சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்கு செல்வதா?:இஸ்லாமியப் பெண்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது. அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை; இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக்கூடாது என மோடி பேசியுள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது.