சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி 7 முறை தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அதேபோல், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 12 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) மாலை திருநெல்வேலியில் பிரதமர் மோடியும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.
பிரதமர் மோடி: இந்த ஆண்டில் 8-ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் ஜான் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மாலை அகஸ்தியர்பட்டுக்கு ஹெலிகாப்டர் மூலமாக வருகிறார். பின்னர், அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகிறார்.
பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அகஸ்தியர்பட்டி சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவிற்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரயில் நிலையில், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:அதேபோல், மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, தென் சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஒரே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் சென்னையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று புதுச்சேரி, கடலூர், விழுப்பும் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரிக்கு வரும் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்கிழமை) காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். வரும் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்து 19ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க:"ஜிஎஸ்டியால் பின்நோக்கி சென்ற திருப்பூர் ஜவுளித் தொழில்" - திருப்பூர் கூட்டத்தில் மத்திய அமைச்சருக்கு கமல்ஹாசன் எழுப்பிய கேள்வி! - Lok Sabha Election 2024