சென்னை:சென்னை கிண்டியில் 116.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தேசிய முதியோர் நல மருத்துவமனையை' பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். மூத்த குடிமக்களின் நலனுக்காக திறக்கப்படும் சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.
மத்திய அரசின் 2014-2015ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின்போது "தேசிய முதியோர் நல மருத்துவமனை" சென்னையில் நிறுவப்படும் என்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு கிண்டி கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ரூ. 78 கோடி மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவமனை அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இதற்கான பணியானது 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும், பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக அவசரகால மருத்துவமனையாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர், 2022ஆம் ஆண்டு மே மாதம் கரோனா மருத்துவமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.