சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள ஔவையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, “அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக, மகளிருக்கான மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பல்வேறு பொது இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் பெண்களுக்காக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.