சேலம்: சேலத்தில் இன்று (மார்ச் 19) பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எனக்கும் தமிழகத்தில் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து எதிர்கட்சி கூட்டணி மிரண்டு போய் உள்ளது. நண்பர்களே, ஏப்ரல் 19ஆம் தேதி விழுகிற ஒவ்வொரு வாக்கும் பாரதிய ஜனதாவுக்கும், என்டிஏ கூட்டணிக்கும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டனர்.
தமிழகத்தில் இந்த உறுதியான முடிவினால் மத்தியில் மோடி மீண்டும் வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். தமிழகத்திற்கும் நாற்பது வேண்டும், இந்தியாவிற்கும் 400 வேண்டும், இந்தியா வளர்ச்சி அடைய நவீன உட்கட்டமைப்பு கிடைக்க மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்க 400-ஐ தாண்ட வேண்டும்.
பாரதம் தன்னிறைவு பெற 400 பெற வேண்டும். நண்பர்களே நமது கூட்டணி வலுவாக உருவாகி இருக்கிறது. நேற்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் நமது கூட்டணியில் இணைந்து உள்ளனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழகத்தை புதிய முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல நம்முடன் இணைந்து உள்ளதால், புதிய உத்வேகம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாகப் பேசிய பிரதமர், "தேர்தல் பிரச்சாரம் தற்போது நாடு முழுவதும் படுவேகமாகத் தொடங்கிவிட்டது. ஆனால், தொடக்கத்திலேயே இந்தியா கூட்டணியின் எண்ணம் என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது. மும்பை, சிவாஜி பார்க்கில் நடந்த முதல் பேரணியிலேயே அவர்களின் அசல் ரூபம் தெரிந்து விட்டது.
இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நமக்கெல்லாம், அதன் சக்தி என்ன என்று தெரியும். அதை அழிப்பது ஒன்றே, அவர்களின் நோக்கம் என்று அவர்கள் பிரச்சாரம் தொடங்கியுள்ளனர். இந்து மதத்தின் சக்தி என்ன என்பதை எப்படி நாம் வணங்குகிறோம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
இந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி இருக்கிறதே, இந்த சக்தியின் ஆன்மீக அம்சத்தை, சனாதனத்தை அழித்து விடுவோம் என்று கூறி வருகின்றன. இதை அனுமதிக்க முடியுமா? புனிதமான செங்கோல் இங்கு உள்ள சைவ ஆதீன மடங்களுக்குச் சொந்தமானது. அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கக்கூடாது என்று அதை அவர்கள் எதிர்த்தார்கள், செங்கோலை அவமதித்தவர்கள், இந்த இந்தியா கூட்டணியினர்.
நாட்டில் பெண் சக்தியின் ஒவ்வொரு பிரச்னைகளையும் தீர்க்கும் விதமாக, நான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்து பணி செய்கிறேன். உதாரணத்திற்கு, சமையலறை புகையில் கஷ்டப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விடிவு கிடைக்கும் வகையில் உஜ்வாலா கேஸ் திட்டம் வழங்கப்பட்டது. ஆயுஷ்மான் திட்டம் வழங்கப்பட்டது. இது போன்ற நிறைய பெண்களுக்கு நலம் தரும் திட்டங்கள் வந்தது.
எந்த பெண் சக்திக்காக திட்டங்களை நடத்தினோமோ, அந்த பெண் சக்தி தான் இன்று எனக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது. பெண்கள் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசம் போல் இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் பெரிய அளவில் நலத்திட்டங்கள் தாய்மார்களையும், சகோதரர்களையும் சென்றடையும், இது மோடியின் உத்தரவாதம்" என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த திமுகவும் காங்கிரஸும் பெண்களை எவ்வளவு இழிவாக நடத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு தான் சாட்சி. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை திமுககாரர்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அதுதான் அவர்களின் உண்மையான முகம். அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வரும்போது நாடாளுமன்றத்தில் அவர்கள் எதிர்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து போய் உள்ளது. ஆகவே என் தமிழகத்தின் தாய்மார்களே, சகோதரிகளே, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் இந்த தேர்தலில் வழங்கக்கூடிய தீர்ப்பு இருக்கிறது. அது திமுகவுக்கு வழங்கக்கூடிய பாடமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரானவர்களின் மனநிலையைக் கண்டிப்பதாக இருக்க வேண்டும்.
திமுகவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சி, இதுதான் அதற்கு அர்த்தம். இவர்கள் இருவரும் ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து செய்பவர்கள். அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டது. இவர்கள் செய்த ஊழலை எல்லாம் பட்டியலிட்டால், அதற்கு ஒரு நாள் போதாது. உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகிறேன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி ரூபாய்களை மிக ஆர்வமாக பாஜக அனுப்ப இருக்கிறது. ஆனால், அந்த பணத்தில் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்பதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது.
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. அது ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகும் காலம். அதனால் நீங்கள் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மக்கள் ஒரு புதிய சாதனையைத் தொடங்கி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பசுபதி பராஸ் ராஜினாமாவுக்கு இதுதான் காரணமா? இந்தியா கூட்டணியில் ஐக்கியமா? பீகாரில் அரசியல் பிளவு?