சென்னை:தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பொறித்த டீ சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேலையூரை சேர்ந்த சத்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "திமுக தொடங்கப்பட்டு 1967 ஆம் ஆண்டு அண்ணாதுரை தமிழகத்தில் ஆட்சி பெறுப்பேற்ற பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேற்கத்திய பாணியில் சட்டை, தமிழ் மரபு படி வேஷ்டி:மறைந்த முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மேற்கத்திய பாணியிலான சட்டை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தபோதிலும், தமிழ் பாரம்பரியத்தின்படி வேஷ்டி அணிவதை வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்படி மேற்கத்திய கலாசாரத்துடன், தமிழ் பாரம்பரியத்தையும் வலியுறுத்திய அவர்கள் நவீனத்தையும், தமிழ் பெருமையையும் நிலை நாட்டினர்.
கருணாநிதியைத் தொடர்ந்து முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலின் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி வேஷ்டி, சட்டை அணிந்து வருகிறார். இதனைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
அரசு உத்தரவுக்கு எதிரானது:கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி துணை முதலமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சராக அவர் சாதாரண டிசர்ட் அணிந்து வருகிறார். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவ்வாறே டி-சர்ட் அணிந்து வருகிறார். இவ்வாறு அவர் உடை அணிவது தமிழ்நாடு அமைச்சக அலுவலக மாதிரி என்ற கடந்த 2019ஆம் ஆண்டு திருத்தப்பட்டG.o.(Ms).No.67 என்ற அரசு உத்தரவுக்கு எதிரானதாகும்.
ஆண் அரசு ஊழியர்கள் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டை மற்றும் பேண்ட் அல்லது வேஷ்டி அணிய வேண்டும் அல்லது இந்தியாவின் பாரம்பரியத்தையும் பிரதிபலிகும் வகையில் அணிய வேண்டும். சாதாரணமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜீன்ஸ் பேண்ட் அணிகிறார். முறையற்ற வகையில் செருப்பு அணிகிறார். இவையெல்லாம் மேற்குறிப்பிட்ட அரசு உத்தரவுக்கு எதிரானதாகும்.
டிசர்ட்டில் கட்சி சின்னம்:மேலும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்று தனது அரசு அலுவலக பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் அலுவலக ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து கலந்து கொள்கிறார். அலுவலக விதிகளுக்கு எதிராக திமுக சின்னம் பொறித்த ஆடைகளை அணிவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே ஆடை கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.