தருமபுரி:தருமபுரி நகர கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள், விடுமுறை தினத்தில் வங்கிக்குள் யாகம் நடத்தியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு நகர வங்கி ஒன்று, அம்மாவட்டத்தின் நகரப் பகுதியில் உள்ள கடைவீதிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த வங்கியில் யாக பூஜை நடந்ததாக, அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 6 மணி முதல் 8.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த யாக பூஜை குறித்த செய்தி, பொதுமக்களுக்கு தெரியாதவாறு வங்கியின் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றை உட்புறமாக தாழிடப்பட்டு, பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பூஜையின்போது, வங்கியின் துணை பதிவாளராக பணியாற்றி வரும் ராஜா என்பவர், அவரது மனைவியுடன் அமர்ந்தவாறு பூஜை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வங்கியில் பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடுகளில் ஈடுபட்டு பணி நீக்கமான முன்னாள் ஊழியர்களும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் இந்த பூஜையில் பங்கேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில், விடுமுறை தினத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த பூஜை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வங்கி ஊழியர்கள் தங்கள் விருப்பம் போல வங்கியை தவறாக பயன்படுத்தி, ஆபத்து அறியாமல் யாகம் வளர்த்தபோது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருந்தால் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் நகைகளுக்கு யார் பொறுப்பு என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்காளர் அட்டைகள் ஒப்படைப்பு - சன்னாபுரம் கிராமத்தினர் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்ததன் காரணம் என்ன?