வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் தமிழக அரசின் ஊரக பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த பெண்கள், மலேசியாவில் உயிரிழந்த அவர்களது சகோதரரின் உடலை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியின் காலில் விழுந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அவர்களுள் ஒருவர் கதறி அழுததில் மயங்கி விழுந்ததார். இதனால் அரங்கத்தில் பதற்றம் நிலவியது. பின்னர், மயங்கி விழுந்தவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து மனு அளிக்க வந்தவர்கள் கூறுகையில், "காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (37). எலக்ட்ரீசியன் வேலை தேடி கடந்த மார்ச் மாதம் மலேசியா சென்றார். முன்னதாக அவரை அழைத்துச் சென்றவரால் ஏமாற்றப்பட்டார். தொடர்ந்து மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை திடீரென அங்கு உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவரது உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம்" எனக் கூறினர்.