மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபைக்கு பாத்தியப்பட்ட பள்ளி உள்ளது. கடந்த 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஜனவரி 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, மாணவியை விடுதி காப்பாளர் துன்புறுத்தியதாகவும், வேலை வாங்கியதாகவும் மற்றும் மதம் மாற வற்புறுத்தியதாலுமே தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவி உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியின் நிர்வாகியான சகாயமேரியை கைது செய்தனர். அதனை அடுத்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். இத்தகைய சூழலில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க:மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!
இந்த நிலையில், சகாயமேரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மாணவி லாவண்யா உயிரிழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாற கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கு தொடர்பாக என் மீது, விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சிபிஐ வழக்கறிஞர் முகைதீன் பாட்சா, "வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 265 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தடயங்களாக 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், நன்கு படிக்கும் மாணவியான லாவண்யாவை பிற வேலைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகவே, மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆவணங்கள் உள்ளன. எனவே, குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நீதிபதி இளங்கோவன், உயிரிழந்த மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை செபம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.