திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் சையது அலி (39). இவர் சோலூர் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினராக உள்ளார். அவருடைய தம்பி ரஃபிக் (38). இருவரும் சேர்ந்து, சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இடத்தில் வாடகைக்கு கடை எடுத்து, தேநீர் கடையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவர், நண்பர்களுடன் வந்து 50 ரூபாய்க்கு பஜ்ஜி வாங்கி உள்ளார். அப்போது பஜ்ஜியின் அளவு சிறிதாகவும், சூடாக இல்லை எனவும் கேட்டு, கடையின் உரிமையாளர் சையத் அலியிடம் அரவிந்த் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இச்சம்பவம் கைகலப்பாக மாறிய நிலையில், உடனடியாக அரவிந்தின் உறவினர்களான விமல் (35) மற்றும் விஜய் (30) ஆகியோர் வேகமாக வந்து, கடையில் இருந்த சையது அலி மற்றும் அவரது சகோதரர் ரஃபிக் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கடையில் பஜ்ஜி சுட்டு வைக்கப்பட்டிருந்த சூடான எண்ணெய்யை எடுத்து, ரஃபிக் மற்றும் சையத் அலி ஆகியோர் விமல் மீது ஊற்றியுள்ளனர். இதில் விமலுக்கு இடதுகை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த பொதுமக்கள், மூன்று பேரையும் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.