திருநெல்வேலி:சொத்து பிரச்னை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த மே 13ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே.16) உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு (32) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது பூர்விக சொத்தில் இருந்து, தனக்கான பங்கை பங்காளிகள் பிரித்து தரவில்லை எனக் கூறி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததாக, மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துச் சென்றுள்ளார்.
ஆனால் அதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனம் உடைந்த சங்கர சுப்பு, கடந்த மே 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட போலீசார் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.