கோயம்புத்தூர்:வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. அதற்கு மேல் மதியத்தில் இருந்து கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாய்பாபா காலனி, சிவானந்த காலனி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் குழந்தைகள் உள்பட 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் முதலில் பேருந்துக்குள் சிக்கி இருந்த பயணிகளை வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்து வெளியேற்றப்பட்டது.