லிப்ட்டில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டனர் (credits to Etvbharat Tamil Nadu) வேலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்சார அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அலுவலக கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் லிப்ட்டிற்குள் சிக்கி தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பின் லிப்ட்டில் சிக்கியிருந்தவர்களை அலுவலக ஊழியர்கள் மீட்டனர்.
வேலூர் மாவட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ளது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தற்போது மாவட்டம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்துவரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்சார அறையில், அதிக வெப்பத்தின் காரணமாக மின்சார மீட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் அப்போது பணியிலிருந்த சந்தோஷ் என்பவர், பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்தால் அலுவலக கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அங்கு இயங்கி வந்த லிப்ட் பாதியிலே நின்றது. இதில் எதிர்பாராதவிதமாக லிப்டில் வந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 9 பேர் உள்ளேயே சிக்கித் தவித்தனர்.
இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் லிப்ட்டை திறந்து, உள்ளே சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை மின் ஊழியர்களால் பழுது நீக்கப்பட்டு, 20 நிமிடத்திற்கு பிறகு ஜெனரேட்டர் மூலம் இரண்டு கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்! - Kanniyakumari Tourist Death