தமிழ்நாடு

tamil nadu

ஈஷா நவீன எரிவாயு மயானம் கட்டுவதற்கு வெளியூர் மக்கள் இடையூறு? விரைந்து முடிக்க கிராமத்தினர் கோரிக்கை! - Isha gas cemetery

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 4:17 PM IST

Isha gas cemetery: ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டியும் ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:ஈஷா யோகா மையத்தில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷா யோகா மையம் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) மனு அளித்தனர்.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது, "தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துயல், செம்மேடு ஆகிய 6 கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம். அந்த ஆறு கிராமங்களில் 4 கிராமங்கள் பழங்குடி கிராமங்கள் ஆகும்.

எங்கள் கிராமங்களில் சரியான மயான வசதி இல்லாத காரணத்தினால், இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை செய்வதற்கு நாங்கள் 20 கி.மீ வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பல சிரமங்களைச் சந்தித்து வருகிறோம். அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்த்து செய்யும் சடங்களைச் செய்வதிலும் சிரமங்களைச் சந்தித்து வருகிறோம்.

எனவே, எங்கள் கிராமங்களுக்கு அருகிலேயே நல்லதொரு மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு கிராம மக்களும் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்துள்ளோம்.

இந்நிலையில், எங்கள் கிராமங்களுக்கு அருகே உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், அவர்களின் செலவில், நவீன எரிவாயு மயானம் ஒன்று கட்டுப்பட்டு வரும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என எங்களுடைய கிராமங்களுக்கு ஈஷா யோகா மையம் பல உதவிகளை செய்துள்ளது.

தொடர்ந்து அரசு அனுமதி அளித்ததை அடுத்து, நவீன எரிவாயு மயானமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 6 கிராம மக்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்த நிலையில், சிவஞானம், காமராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட வெளியூரைச் சார்ந்த நபர்கள் சிலர், ஈஷா யோகா மையத்தில் கட்டுப்பட்டு வரும் எரிவாயு மயானப் பணிகளை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எங்கள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, பொய்யான செய்திகளை பரப்பி, ஊர் மக்கள் மத்தியில் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அந்த நபர்கள் சில ஊடகங்களில் ஈஷாவிற்கு எதிராக அவதூறாக பேட்டியும் அளித்து வருகின்றனர்.

எனவே, எங்கள் கிராம மக்களுக்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானப் பணிகள் எவ்வித இடையூறும் இன்றி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்" எனக் கூறினர்.

இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனத்தில் யானை மீது திருமுறை வீதியுலா! 50 ஆண்டுகளுக்குப் பின் பூரண கும்ப மரியாதையுடன் அரங்கேற்றம்

ABOUT THE AUTHOR

...view details