கேள்வி 1: பிரபலத்தின் மரணம் என்ற பரபரப்புடன் நடிகை பூனம் பாண்டே பரப்பிய வதந்தியை உண்மை சரிபார்ப்பு நிபுணராக நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
பதில்:முதலில் இந்த செய்தி அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இருந்தது. இது தொடர்பாக வேறு எங்கும் தகவல் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராம் பக்க தகவலை உறுதீப்படுத்தும் வகையில் எந்த மருத்துவச் சான்றும் கிடைக்கவில்லை. 3 நாட்களுக்கு முன்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு கம்பளத்தில் திடமாக நடந்து வந்தவர் புற்று நோயால் இறந்துவிட்டார் என்ற செய்தியே நம்பத்தகுந்ததாக இல்லை.
ஆனால் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதன் காரணமாக பல்வேறு செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. சந்தேகத்திற்கான முகாந்திரம் இருந்த போதிலும், உண்மை சரிபார்ப்பு என்பது ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலேயே இயங்கக்கூடியது. இறப்பை உறுதிப்படுத்து மருத்துவ அறிக்கை மற்றும் இறந்தவரின் உடல் எங்கிருக்கிறது என்பது தெரியாத காரணத்தால் உண்மையை சரிபார்ப்பதே சவாலாக இருந்த்து.
கேள்வி 2:சந்தேகம் அல்லது நம்பகத்தன்மையற்ற சூழல் நிலவும் போது, இந்த பொய்ச் செய்திக்கு எதிரான நடவடிக்கை அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது ஏன்?
பதில்:பூனம் பாண்டே மரணம் என்ற பொய்யான தகவல் அவருடையை அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி காலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அவரை சார்ந்த நபர்களை உடனடியாக தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது நெருங்கிய நண்பரான முனாஃபர் ஃபரூகி என்பவரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், துக்கத்தை தாள முடியவில்லை என தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முனாஃபரின் பதிவு 2.13 மணிக்கு வெளியானது. 4 மணி வரையிலும் மேலதிக ஆதாரங்கள் கிடைக்காததால் தேசிய அளவிலான உண்மை சரிபார்ப்பு நிபுணர்களின் குழுவில் செய்தியின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. மும்பையைச் சேர்ந்த உண்மை சரிபார்ப்பு வல்லுநர், தகவலை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்டங்களில், பூனம் பாண்டேவுக்கு நெருக்கமான பல்வேறு நபர்களிடம் தொடர்பு கொண்டு அதன் மூலம் , “மரணம் என்ற தகவல் உண்மை இல்லை.
இது பரபரப்பு விளம்பரத்திற்கானது” என்று அன்று மாலையே உறுதி செய்தார். ஆனாலும், சான்றுகள் அடிப்படையில் நிறுவுவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்ததால் அதனை பொய்ச்செய்தி என்று அதிகாரப்பூர்வமாக மறுக்க இயலவில்லை. இந்த மாதிரியான பொய்ச்செய்திகளை POST TRUTH என கூறலாம். அதாவது சம்பந்தப்பட்ட நபரோ, அவரது குடும்பத்தினரோ மறுக்காத வரையிலும் இதனை பொய் என்று நிறுவுவது கடினமானது.
கேள்வி 3:பொய்ச்செய்தி என்ற போதிலும் இதன் நோக்கம் கருப்பை வாய் புற்று நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகதான் என்று பூனம் பாண்டே கூறுகிறார். இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ள முடியாதது ஏன்?
பதில்:நேர்மறையாக அறவே கருத முடியாது என்பது தான் என்னுடைய பதில். நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த யுக்தியே அடிப்படையில் தவறானது. காரணம் என்னவென்றால், இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவோரின் நம்பிக்கையை மரணம் என்கிற ஒற்றை பொய்ச்செய்தியே தகர்த்து விடுகிறது.
இந்த உளவியல் போரின் தாக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவரும், அவரின் நெருங்கிய நபர்களும் மீண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. விழிப்புணர்வு நோக்கமாக இருந்தால், நேர்மையான வழியைத் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய் பரப்புரையை மேற்கொள்வது தீர்வாக அமையாது. இது நேரடி பலனைக் காட்டிலும் பக்கவிளைவுகளைத் தான் பொதுச்சூழலில் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் இது மோசமான முன்னுதாரணமாகவும் உள்ளது.
கேள்வி 4: பொய்பரப்புரை என்ற பதத்தை பயன் படுத்துகிறீர்கள், பொய் செய்திக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பொய்ச் செய்தி எந்த கணத்தில் பொய் பரப்புரையாக உருவமெடுக்கிறது.
பதில்:பொய்ச்செய்தி (Disinformation) என்பது ஒரு தனிநபர் தெரிந்தே பரப்பக்கூடிய தவறான தகவலாகும். பொய் பரப்புரை (Disinformation Campaign) என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட பொய்யை உருவாக்கி அதனை பரப்புவதற்காகவே ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது ஆகும்.