சென்னை:தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 ஆம் வரை மீன்பிடி தடைகாலமானது ஆண்டுதோறும் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் 61 நாட்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை காலமானது முடிவடைந்த நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களுக்கு தேவையான ஐஸ் மற்றும் பொருட்களை வாங்கி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஒரு சில படகுகள் ஒரு வாரமும் ஒரு சில படகுகள் ஒரு நாளிலும் கரை திரும்பும் வகையில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு நாளில் திரும்பும் படகுகள் மூலமாக பிடிக்கப்பட்ட மீன்கள் காசிமேடு மீன்பிடிச் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது
50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக பிடிக்கப்பட்ட மீன்கள் காசிமேடு மீன்பிடி சந்தையில் ஏல முறையில் மீன்விற்பனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏல முறையில் தொடங்கிய இந்த விற்பனையில் சென்னையின் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு மீன் சந்தை பகுதிகளில் கடை வைத்திருக்கக்கூடிய பெருவியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பலரும் ஏல முறையில் மீன்களை வாங்கி சென்றனர்.
மீன்கள் விலை நிலவரம்?:மீன்களின் விலையை பொறுத்த மட்டில் வஞ்சிரம் கிலோ 1300 ரூ, சிறிய வஞ்சிரம் கிலோ 600 ரூ, வவ்வால் கிலோ 600, கொடுவா கிலோ 500 ரூ, சங்கரா கிலோ 400 ரூ, கடம்பா கிலோ 450 ரூ, இறால் கிலோ 400 ரூ, கானங்கத்த கிலோ 400 ரூ, பாறை கிலோ 600 ரூ, நெத்திலி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.