தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் கணேசன் (வயது 56). மனைவி மாலா. இவரது வீட்டில் 25 அடி உள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்ய நினைத்த கணேசன், இதற்காக அவரது உறவினர் மூவரை அழைத்துள்ளார்.
அதன் படி அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பவித்ரன், ஜேசுராஜன் மற்றும் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (36) ஆகியோர் வந்த நிலையில், நேற்று பிற்பகல் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலாவதாக கிணற்றினுள் கணேசன் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய கணேசன் வெகு நேரமாகியும் மேலே வராததை தொடர்ந்து, அடுத்ததாக மாரிமுத்து இறங்கியுள்ளார்.
அவரும் மேலே வராதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பவித்ரன், ஜேசுராஜன் அவர்களும் கிணற்றினுள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கிணற்றினுள் இருந்து அவர்கள் அலறியதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆக்சிஜன் உதவியுடன் கடும் சிரமத்திற்கிடையில், கிணற்றில் இருந்த கணேசன், மாரிமுத்து, பவித்ரன், ஜேசுராஜன் ஆகியோரை மீட்டனர்.