தருமபுரி: நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்கள் ஜனநாயக கடைமைய செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ர.அசோகன் தனது குடும்பத்துடன் வந்து அன்னசாகரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் என்னுடைய குடும்பத்தோடு வந்து ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மக்கள் அனைவரும் தவராமல் வந்து வாக்களியுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக இத்தேர்தலில் இளைஞர்களும், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்துவதை காணமுடிகிறது. இதனிடையே, வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிழற்பந்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.