திருப்பூர்:திட்டமிடல் இல்லாத சாலை விரிவாக்க பணியால் மயானத்திற்கு செல்லும் பாதையில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை தேங்கியுள்ள கழிவு நீரில் சுமந்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். எனவே, இப்பகுதியில் முறையான சாலை வசதியை ஏற்படுத்தி தருமாறும், நீர்வழிப் பாதையில் போடப்பட்ட சாலையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட மடத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தான் (வயது 85). இவர் உடல் நலக்குறைவால் நேற்று (ஜனவரி 21) திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக உறவினர்கள் தயாராகினர்.
இதற்கிடையில், அவிநாசி செம்மாண்டம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் எடுக்கப்பட்ட பள்ளத்தில், அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தேக்கமடைந்து, மடத்துப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்களின் மயான பாதையை சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது, ஆதிதிராவிடர் காலனி மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்திற்கு போகும் பாதையில் கழிவு நீர் சூழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மாற்று வழியின்றி இறந்தவர் உடலை முழங்கால் அளவிற்கு மேல் தேங்கியுள்ள கழிவு நீரைச் கடந்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், "தற்போது பகல் நேரத்தில் நாங்கள் இப்பதையை கடந்து வந்து விட்டோம். இரவு நேரத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எப்படி இந்த கழிவு நீரில் கடப்பது? இங்கே சாலை வசதி, மின்விளக்கு வசதி எதுவுமில்லை.