நீலகிரி:மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், இங்குள்ள குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது.
மேலும். இரவில் மட்டும் வந்துகொண்டிருந்த வன விலங்குகள் தற்போது பகல் நேரங்களிலும் வெளியே வரத்தொடங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள கரிமொரா ஹைட்டி கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து அங்குள்ள குடிநீர்த் தொட்டியின் மேல் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தது.
குடிநீர்த் தொட்டிக்கு அருகில்தான் ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. இதனால் சிறுத்தையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கேமராவுடன் வந்த வனத்துறையினர், குடிநீர்த்தொட்டி மீது படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சிறுத்தையை கேமராவில் பதிவு செய்து உறுதி செய்தனர்.