சென்னை: "இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் இருந்து விலங்குகளின் குணாதிசயங்களை தெரிந்துகொண்டேன். இங்க வாங்க..சந்தோஷமா இருங்க" என புனரமைக்கப்பட்ட கிண்டி குழந்தைகள் பூங்காவை பார்வையிட வந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் வருண் பாலாஜி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்துகிறார்.
நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,அரசு சார்பில் குழந்தைகளின் நலனுக்காக ஆங்காங்கே விளையாடுவதற்கு விளையாட்டு மைதான வசதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்கா சென்னை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
30 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 4ம் தேதி திறந்து வைத்தார். புதுபொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பூங்கா சென்னை ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் என சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் பேர் வருகை தரும் இந்த கிண்டி சிறுவர் பூங்கா 1959ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை வாசிகளுக்கு இந்த பூங்கா வரப்பிரசாதமாக இருக்கிறது.
இயற்கை கல்வி மையம்:2016ல் ஏற்பட்ட வர்தா புயலால் சற்று பொலிவை இழந்திருந்த பூங்கா 2023ல் மறுசீரமைப்பிற்காக மூட்டப்பட்டது. சுமார் ஒரு வருடம் கழித்து திறக்கப்பட்ட பூங்காவில் நூலகம், ஜூ கஃபே, பசுமை நிறைந்த செல்பி ஃபாண்ட் என மெருகேற்றப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், பாதுகாப்பில் அவர்களை ஈடுபடுத்தவும் இது ஒரு இயற்கை கல்வி மையமாக செயல்படுகிறது.
மேலும், பூங்காவின் பல்லுயிர் பெருக்கம், நகரவாசிகளுக்கு பகலில் அமைதியான சூழலையும், சுகாதாரமான சூழலையும் வழங்குகிறது. பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள், 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவைகளும் இந்த பூங்காவில் உள்ளன.