திருவாரூர்:தமிழகத்திலேயே அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டமாகவும், விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அதிக மக்கள் கொண்ட மாவட்டமாகவும் திருவாரூர் மாவட்டம் விளங்கி வருகிறது. எனவே, விவசாய தினக்கூலி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை நம்பி இங்கு பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
பொது விநியோக திட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 742 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. 3 லட்சத்து 91 ஆயிரத்து 136 குடும்ப அட்டைகள் உள்ளன. குறிப்பாக, திருவாரூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் மாதத்திற்கு மூன்று லட்சத்துக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளும் மற்றும் 2 லட்சத்து 94 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இரண்டு மாதம் தட்டுப்பாடு: இங்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், திருவாரூர் மடப்புரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த இரண்டு மாத காலமாக, பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருள்களை மட்டும் நம்பியுள்ள இப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மடப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலக்ஷ்மி கூறுகையில், “ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் மற்றும் பருப்பு போன்றவை சாதாரணமாக ஏழை, எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை. வெளியில் விலை அதிகம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. இந்த மாதத்திற்கான பொருள்கள் வராது என்று கடை ஊழியர்கள் கூறுகின்றனர். வெளியில் வாங்கினால் அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே, அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.