விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 நபர்கள், கடந்த ஜூலை 8ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் 7 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 10) 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இரண்டு பேருக்கு தொடர் குடிப்பழக்கம் இருந்து வந்ததால் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தின் வீரியம் இன்றும் குறையாத நிலையில், புதுச்சேரி சாராயம் குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, "நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று முதலமைச்சர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.